தேசிய தலைவர்கள் முன்னிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா கர்நாடகாவின் 24வது முதலமைச்சராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் இன்று பதவியேற்றுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, சிபிஐ தலைவர் டி.ராஜா, சிபிஐ (எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் என அனைவரும் ஓரணியில் திரண்டனர்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி தலைவர்களும் திரண்டிருந்தது பாஜகவை பெரும் அச்சத்தில் ஆழ்த்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post