நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் வீட்டு பக்கத்திலுள்ள 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் அந்த இளைஞரை கண்டித்துள்ளனர். சிறுமியையும் எச்சரித்துள்ளனர். வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக தெரிகிறது. இதனால், பயந்து போன சிறுமி அந்த இளைஞரிடத்தில் தன்னை வேறு எங்காவது அழைத்து போகும்படி கூறியுள்ளார்.
தொடர்ந்து, அந்த இளைஞர் சிறுமியை தனது உறவினர் வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது, சிறுமியிடம் உடல் உறவு வைத்ததாக சொல்லப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, இளைஞரையும் சிறுமியையும் போலீசார் மீட்டனர். சிறுமியிடன் உடல்ரீதியாக உறவு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்ய இளைஞர் முன்வந்ததால் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகனிடத்தில் விசாரணைககு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். மேலும், நீதிபதி கூறுகையில், போக்சோ வழக்கின் கீழ் செய்யப்படும் குற்றங்கள் தனிநபருக்கு எதிரானதாக மட்டும் பார்க்க கூடாது. இது ஒரு சமுதாயத்துக்கே எதிரானதாக கருதப்பட வேண்டும். சிறுமியாக இருந்த போது குற்றவாளி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். திருமணத்தை காரணம் காட்டி தண்டனையை ரத்து செய்வது போக்சோ சட்டம் இயற்றப்பட்டதற்கான காரணத்தையே அவமதிப்பது போலாகும். எனவே, அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.