தமிழகத்தில் இன்று(மார்ச்.26) 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று(மார்ச்.26) சென்னை,கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை(மார்ச்.27) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள்(மார்ச்.28) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 29ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.