”பல தொழிலாளர்கள் சார்ந்த விஷயம்”.. நடிகர் கார்த்திக்..!
ஒரு சினிமா தரமான முறையில் வரவேண்டும் என்றால், தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், இவற்றையும் தாண்டி, நடிகருக்கும், அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே, ஒரு சுமூகமான உறவு இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில், பெரும் பிரச்சனை தான் ஏற்படும். காலம் காலமாக நடக்கும் இந்த பிரச்சனை, தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது, ஏற்கனவே நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம், சமீபத்தில் நடிகர் தனுஷ்-க்கும் ரெட் கார்டு கொடுத்துள்ளது. மேலும், தனுஷை வைத்து திரைப்படம் தயாரிக்க உள்ளவர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்கம் கூறியது.
இந்நிலையில், நடிகர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ், நாசர், விஷால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்ட நிலையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கம் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தயாரிப்பாளர் சங்கம் திடீரென எடுத்த முடிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இதுவரை பேசிய விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டு வந்தது. பிரச்சினையையும் தீர்த்து வருகிறோம். ஆனால், இந்த பிரச்சினை குறித்து அவர்கள் அளித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை.
அதற்கான விளக்கத்தையும் நாங்கள் எங்கள் அறிக்கையில் கேட்டிருக்கிறோம். தொடர்ந்து இனிமேல் அவர்கள் பணியாற்ற முடியாது என்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று நினைக்கிறேன்.
படப்பிடிப்பை நிறுத்துவது என்பது, எத்தனையோ தொழிலாளர்கள் சார்ந்த விஷயம். அதை எப்படி அவர்களே முடிவு எடுக்க முடியும் என்பதும் சந்தேகத்திற்குரியது. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வேலைநிறுத்தம் முடிவை எடுக்கக் கூடாது” என்று கூறினர்.
-பவானி கார்த்திக்