நடிகர் விஜய்சேதுபதி நடித்த ஆகா ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாமனிதன்.
அப்படத்தை பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் மாமனிதன் திரைப்படம் ‘அறத்தின் வழி வந்த படைப்பு’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அப்படத்தை பற்றி அவர் கூறுகையில்…
அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வே கதைக்களம். வழமையான சீனு ராமசாமியின் படங்கள் போலவே யதார்த்த பாணி, என்ன பெரிதாக அல்லது புதிதாக இதில் எனச் சற்று விட்டேத்தியாக நம்மைச் சாய்ந்து உட்காரவைக்கும் நினவுகளுடன் தான் திரைப்படம் தொடங்குகிறது. ஆனால் சமகாலத்திய வாழ்வில் தனக்கான ஒரு எளிய அறமுடன் வாழத்துடிக்கும் – வாழ்ந்தும் முடிக்கும் ஒரு மனிதனின் கதையாக அது விரியும்போது ஈர்ப்பின் விம்மலுடன் சற்று நிமிர்கிறோம்.
சின்னஞ்சிறு கூட்டில் பேராசையின்றி அன்றாட வாழ்வை நகர்த்தும் ஒரு குடும்பத்தலைவனின் அகலக்கால் முயற்சி அதளபாதாளமாவது சமயங்களில் அது ஒட்டுமொத்தக் குடும்பத் தற்கொலைகளில் முடிவதும் நமக்கு அசாதாரணச் செய்தியல்ல.
படத்தின் வசங்கள் தான் சீனுவின் பலம் – விஜய் சேதுபதிக்கு அயிரை மீன்களைப் பாலில் எளிதாகக் கழுவுவதைப் போலக் கதைநாயகன் வேலை உள்ளது.
அன்பு சீனு – வணிகச் சமரசமற்று வாழ்வின் கீற்றுகளைத் தான் நம்பும் அறத்தின் வழியில் படைத்தன்மைக்கு வாழ்த்துக்கள் என மொத்த படக்குழுவை பாராட்டியுள்ளார்.