சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(மார்ச்.10) தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் இன்று(மார்ச்.10) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவரும் நேர்மையாக, வெளிப்படை தன்மையோடு முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.மக்களுக்கு பயனளிக்கும் முன்னெடுப்புகளை விளக்கமாக தெரிவித்தால் அரசு அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும்.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணிக்க வேண்டும். மக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்க போலீஸ் பாரபட்சம் காண்பிக்கக் கூடாது. மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘ உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பசுமை பரப்பினை 33% ஆக உயர்த்திட வேண்டும்.
தடுப்பூசி போடும் மாபெரும் இயக்கம் வெற்றி பெறும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டது பாராட்டத்தக்கது, என தெரிவித்துள்ளார்.