கர்நாடகாவில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மளவள்ளியைச் சேர்ந்த குமார் என்பவரது குடும்பத்தினரும், அவரது நண்பரான மஞ்சுநாத் அவரது மனைவி பிரியங்கா, மகள் மனுஸ்ரீ ஆகியோரும் குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள குக்கி சுப்ரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்த 8 பேரும் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். குடகு-தட்சின கன்னடா எல்லையில் உள்ள சம்பாஜே கேட் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் குமார் (35) ஷில்பா (29), யஷாஸ் கவுடா (8), பிரியங்கா (35), மூன்று வயது மனுஸ்ரீ மற்றும் எட்டு மாத குழந்தை நிஷிகா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் எட்டு வயதான பியான் கவுடா மற்றும் 40 வயதான மஞ்சுநாத் ஆகியோர் காயமடைந்துள்ளனர். சுல்லியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக மங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Discussion about this post