நேற்று கூட, எடப்பாடி பழனிசாமிக்காக பேரம் பேசுனாங்க என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். கொடநாடு வழக்கில் ஆவணங்களை மறைத்ததில் கனகராஜின் அண்ணன் தனபாலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த அவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.
இதையடுத்து கோவை சிபிசிஐடி கூடுதல் துணை கமிஷனர், வரும் 14-ம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனபாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளார் நேற்று மாலை அந்த சம்மனை தனபால் பெற்றுக்கொண்டார். இதனிடையே சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் தனபால் மனைவி செந்தாமரைச்செல்வி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக எந்த ஆதாரமும் கனகராஜின் அண்ணன் தனபாலிடம் இல்லை; தனபால் பேச்சால் எனக்கும், என் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து. யாருடைய தூண்டுதலின் பேரிலோ உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி வருகிறார் தனபால்; அவரின் பேச்சுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை இவ்வாறு கூறினார்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால்; எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்சனை கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும் என் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும், கருத்து வேறுபாடு கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல் பேரில், தாரமங்கலம் ஒன்றிய கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து கோவையில் சிபிசிஐடியில் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனது மனைவியை மூளைச் சலவை செய்து தனக்கு எனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளனர்; குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்கின்றனர்.
நேத்து காலையில கூட, எடப்பாடி பழனிசாமிக்காக பேரம் பேசுனாங்க. சிபிசிஐடியிடம் எதுவும் கூறக்கூடாது என பேரம் பேசினர்; விசாரணையை நீர்த்துப் போக செய்ய எடப்பாடி பழனிசாமி சதி செய்கிறார். எடப்பாடி பழனிசாமியால் தான் எனக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக எனது மனைவி, இரண்டு பெண் குழந்தை உள்ளது. தந்தை இல்லாமல் போனால் என்னவாகும் என்று தான் எனது மனைவி பயப்படுகிறார். கோவையில் சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகி அனைத்து உண்மைகளும் சொல்கிறேன். மேலும் புகார் கொடுக்க தயாராக இருக்கிறேன் இவ்வாறு கூறினார்.