சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில், இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியிருந்தது.
இந்த கோரிக்கையை மாநில அமைச்சரவை, ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது.
இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் கிடைக்காத நிலையில் வழக்கில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றும், ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு ஆளுநர் இந்தளவுக்கு பிரச்னைக்குரிய நபராக மாறியது தமிழக வரலாற்றிலே கிடையாது என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.