ADVERTISEMENT
மருமகள் அளித்த வரதட்சணை புகார் தொடர்பாக மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ.சதாசிவத்திடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா (24). இவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019 ம் வருடம் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சங்கர் அவரது மனைவி மனோலியாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை கணவரின் பெற்றோர்கள் கண்டிக்காமல் அவர்களும், மனோலியாவை இழிவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில் தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை வரதட்சிணை பணம் கேட்டு கொடுமை செய்வதாகாவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மருமகள் அளித்த வரதட்சணை புகாரில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மனைவி, மகன், மகள் மீது 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் சதாசிவம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சதாசிவம், அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனது குடும்பத்தினருடன் எம்.எல்.ஏ. சதாசிவம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.