தெலங்கானாவில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால் கணவரை சரமாரியாக தாக்கி புதுப்பெண்ணை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரை சேர்ந்தவர் சன்னி. பத்ராத்ரி கொத்தகூடத்தை சேர்ந்தவர் மாதவி. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த மாதவியின் பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர். காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாதவி, பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 மாதங்களுக்கு முன்பு சன்னியை திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதவியின் குடும்பத்தினர் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சன்னி, மாதவி இருவரும் கம்மத்தில் இருந்து பத்ராத்ரி கொத்தகூடத்திற்கு நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு கார், திடீரென ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் காரில் இருந்த இறங்கிய நபர்கள், சன்னியை சரமாரியாக தாக்கிவிட்டு, மாதவியை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து சன்னி பத்ராத்ரி போலீசில் புகார் செய்தார். அதில் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் எனது மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
எனது மனைவியை அவரது உறவினர்களான ராமகிருஷ்ணா, ஜோதி, அனுப்பிரியா உள்பட 4 பேர் கடத்தி சென்றுவிட்டனர் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் ராமகிருஷ்ணன் உள்பட 4பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

















