வாகனம் திருட்டு போனால் உடனடி கண்டுபிடிப்பு..! ஐ.வி.எம்.எஸ்..?
வாகனங்கள் திருடு போய்விட்டால் அதனை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகன திருட்டு ஏற்பட்டால் கண்டுபிடிப்பது சவாலான காரியம்.
அந்த வாகனங்கள் அல்லது அதன் பாகங்களை திருடி விற்பது ஒரு பக்கம் என்றால்.. செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களுக்குத் திருடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த படுகிறது.
தற்போது இதற்கு ஒரு புள்ளி வைக்கும் விதமாக
ஒரு அட்டகாசமான தீர்வை சென்னை மாநகர காவல்துறை புதிய தொழில்நுட்பம் ஒன்றை கையில் கொண்டு வந்துள்ளது.
ரூ.1.8 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (ஐ.வி.எம்.எஸ்), சென்னை மாநகர காவல்துறையின் பயன்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுக்க 28 இடங்களில் 100க்கும் மேற்பட்ட தானியங்கி ANPR கேமராக்கள் இருக்கும் நிலையில், காணாமல் போன வாகன எண் தரவை சேர்த்தால், கண்காணிப்புக் கேமரா அந்த வாகனம் எந்த இடத்தில் கடந்து சென்றாலும் காவல்துறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு உடனடியாக தகவல் கொடுத்து விடும். அதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை டிராக் செய்து கண்டுபிடிப்பார்கள்.
சோதனை முறையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போதே தினசரி ஓரிரு திருட்டு வழக்குகள் இதன் மூலம் குறைந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது முதற்கட்டமாக 2021ம் ஆண்டு முதல் காணாமல் போன 3,200 வாகனங்களின் பதிவெண் தரவுகளை சேர்த்து, அவற்றை கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர 50க்கும் மேற்ப்பட்ட நகரக்கூடிய கேமராக்களும் சென்னையில் பல இடங்களில் இருக்கிறது. இந்த கேமராக்கள் வாகனம் மற்றும் அதில் பயணிப்போரின் போட்டோக்களை எடுத்து, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களையும் போலீசாருக்கு அனுப்புகிறது.
மேலும் இரவு நேரங்கள், மோசமான வானிலை என எந்த சூழலிலும் போட்டோக்களை இந்த கேமராக்களால் எடுக்க முடியும் என்பது மற்றொரு சிறப்பாகும். எனவே இதன் மூலம் இனி பல திருட்டு வாகனங்களை மிக எளிதாக கண்டு பிடிக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்