“ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்..” முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு..!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் “தீரன் சின்னமலை” அவர்களது நினைவு நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்.. வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம்..!
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்..” என பதிவிட்டுள்ளார்..
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை, கிண்டியில் முழு உருவச் சிலையினை அமைத்தார். இதனைக் கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது