“பிரேக் லிவர்-க்கு பதில் ஆக்சிலேட்டர் அழுத்திட்டேன்..” பரபரப்பான ஈசிஆர்.!!
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதில் சாலை ஓரமாக இருந்த கடைகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் நான்கு பேர் காயம்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை பள்ளிக்கரணை மார்க்கமாக மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் லிவரை அழுத்துவதற்கு பதிலாக மாற்றி ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே சென்ற ஆட்டோ மீது மோதி இழுத்து சென்று சாலை ஓரத்தில் இருந்த இளநீர் கடை மற்றும் பாதசாரிகள் இருவர் மீது மோதி நின்றது.
இதில் ஆட்டோ ஓட்டுநர் இளநீர் கடைக்காரர் மற்றும் பாதுசாரிகள் இருவர் பலத்த காயங்களுடன் அங்கேயே விழுந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து பலத்த காயமடைந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயம் அடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.