”கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்”- ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு..!
நடிகர் ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜெயம் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஜெயம் ரவி. இந்த படத்திற்கு பிறகு, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், கோமாளி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
ஆனால், சமீப காலங்களாக, இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்கள், பெரிய வெற்றியை பெறாமலே இருந்து வருகிறது. இந்த சோகத்துக்கு மத்தியில், இவரது வாழ்க்கையில் பெரிய அடி ஒன்றும் விழுந்துள்ளது. அதாவது, ஜெயம் ரவிக்கும், அவரது மனைவிக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும், இதனால், இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.
இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு கருத்துகளை கூறி வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுவரை மெளனம் காத்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது இதுதொடர்பாக நடிகர் ஜெயம்ரவி பதிவு ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில் ”நீண்ட கால யோசனைக்கு பிறகும் பல பரிசீலனைக்கு பிறகும் ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது. எனவே எனது தனியுரிமையையும் எனது நெருக்கமானவரின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு கோலிவுட் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.