“எனக்கு வேதனையா இருக்கு” – இரங்கல் சொன்ன முதலமைச்சர்..!
குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸடாலின், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்