விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த நிலையில்… மீண்டும் பரபரப்பு..!
புதுச்சேரி ரெட்டி பாளையம் புதுநகர் பகுதியில் நேற்று முன்தினம் காலை கழிவறைக்கு சென்ற 15 வயது சிறுமி செல்வராணி மற்றும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த தாய் செந்தாமரை அவரது மகள் காமாட்சி என மூன்று பேர் பாதாள சாக்கடையில் இருந்து வெளியான விஷ வாயு தாக்கி உயிர் இழந்தனர்.
தொடர்ந்து மூவரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் நகராட்சி சார்பில் மக்கள் அனைவரையுமே வெளியேற்றிவிட்டு சாக்கடைகளை சுத்திகரிக்கும் பணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதனை செய்தனர்.
பின்னர் நேற்று மாலை முதல் அப்பகுதி மக்கள் தங்களது இல்லங்களில் அச்சமின்றி தங்கலாம் எனவும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவரது மனைவியான புஷ்பராணி (38) என்பவர் கழிவறைக்கு சென்ற போது விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.
இதனை அடுத்து அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது மீண்டும் தனலட்சுமி, சுலோச்சனா, பூமகள், வெரோனிகா, மேரி செல்வம் ஆகிய ஐந்து பேர் மயக்கம் அடைந்தனர்.
இந்நிலையில் மயக்கம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் மக்கள் விஷ வாயு தாக்கப்பட்டு மயக்கம் அடைந்து வருகின்ற சம்பவம் அப்பகுதியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்ததில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் சரி செய்யப்படாத காரணத்தினால் மீண்டும் இந்த விஷவாயு தாக்கி இருக்கலாம் என கழிவுநீர் குழாய்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் ஏன் கடந்த இரண்டு நாட்களாக கழிவு நீர் குழாய்களை சரி செய்யவில்லை ஏன் முற்றிலுமாக இதனை சரி செய்யாமல் அரைகுறையாக செய்து விட்டு சென்றீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக அப்பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி என இரண்டு பள்ளிகள் வருகின்ற 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
-பவானி கார்த்திக்