மாபெரும் வெற்றி..! முதலமைச்சரை சந்தித்த அன்னியூர் சிவா..!
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த “புகழேந்தி” கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அதன் பின் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கைப்பட்டது.. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா மற்ற வேட்பாளர்களை விட 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கௌதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது அன்னியூர் சிவாவுக்கு கிடைத்த வெற்றி இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்” என அவர் கூறினார்.
– லோகேஸ்வரி.வெ