வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. அதன் விலையை குறைக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
பின்னர் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில்தான் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் தெரிவித்தார்.
அதில் கூறியாதவது:
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 30-ந் தேதியில் (இன்று) இருந்து இம்முடிவு அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் அதன் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சிலிண்டர் விலை குறைப்பை தொடர்ந்து, சென்னையில் ரூ.1,118.50 ஆக உள்ள வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.