டேட்டிங் ஆப் மூலம் சினிமா சவுண்ட் இன்ஜினியரிடம் பணம் பறித்த கும்பல்..போலீஸ் விசாரணை..!
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் வசித்து வரும் 56 வயதாகும் நபர் சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இவர் டேட்டிங் ஆப் மூலம் அடிக்கடி டேட்டிங் செல்வது வழக்கம். அந்த வகையில் டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான ஆண் நண்பர், அழைப்பை ஏற்றுகொண்ட இவர் வடபழனி முருகன் கோயில் அருகே சென்று தனது நண்பரை சந்தித்துள்ளார்.
அப்போது, இளம்பெண் ஒருவர் எனது வீட்டில் இருப்பதாக அந்த ஆண் நண்பர் கூறியதை கேட்டு வடபழனி, மாதா தெருவிற்கு அந்த நபரை அழைத்து சென்றார்.
அங்கு சென்றதும் வீட்டில் இருந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் சுரேசை மிரட்டி கட்டி வைத்து 2 நாட்களாக தாக்கி உள்ளார்களாம்.
மேலும் அவரிடம் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.27 ஆயிரம் பணம், மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் என அனைத்தையும் அந்த கும்பல் பறித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரை நிர்வாணப்படுத்தி பல கோணங்களில் இளம்பெண்ணுடன் இருப்பது போல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இதுகுறித்து வெளியே சொன்னால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டு விடுவோம் என்று மிரட்டி 2 நாட்களுக்கு பிறகு அனுப்பியுள்ளனர்.
இதனால் அந்த நபர் தனக்கு நேர்ந்ததை யாரிடம் சொல்வதென தெரியாமல் தவித்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் வடபழனி போலீசார் இதைபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை கைது செய்திருந்தனர்.
இதை அறிந்த அந்த நபர் நேற்று வடபழனி காவல் நிலையத்தில் தைரியமாக சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்
விசாரணையில் தஞ்சை பகுதியை சேர்ந்த மாதவன் என்பவர் தனது நண்பர்களான இம்ரான், பரத்குமார், இம்மானுவேல், ஷாம், தமிம் அன்சாரி மற்றும் 2 இளம்பெண்களுடன் சேர்ந்து சினிமா சவுண்ட் இன்ஜினியரை 2 நாள் வீட்டில் கட்டி வைத்து பணம் பறித்தது தெரியவந்தது.
பின்னர் மாதவன், வடபழனியை சேர்ந்த இம்ரான், பரத்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்