
அப்போது, மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் அடுத்தடுத்து வழங்கப்பட இருக்கிறது. இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும். மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணதொகை ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து ரூ.8000 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இது நம்முடைய அரசு! எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மாநிலத்திற்குள் உள்ள தேவைகளை நாங்கள் நிறைவேற்றுவோம். ஆனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்னைகள், இன்னமும் பிரச்னைகளாவே இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இருக்கும் தீராத பிரச்னையா இது இருக்கிறது. இலங்கையில் தமிழர்களோட உரிமைப் போராட்டம் எப்போது தொடங்கியதோ, அப்போதிருந்தே, தமிழ்நாட்டு மீனவர்கள தாக்குவதையும் இலங்கை அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகாவது தமிழ்நாட்டு மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியுமா என்றால் அதுவும் இல்லை.
அதே தாக்குதல், கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள் தொடரத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, 2014-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்து. பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கு. கைது, தாக்குதல், சிறைச்சாலைகள் என்பதைத் தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அந்த படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வது அதிகமாக இருக்கிறது.
மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை தருவது இல்லை. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும், வலையும்தான். படகுகளை உடைப்பதும் – வலைகளை அறுப்பதும் இலங்கை அரசாங்கத்திற்கு வழக்கமாக இருக்கிறது. இத்தகைய படகுகள் இலங்கை அரசாங்கத்தின் உடமையாகும் என்று அந்த நாட்டின் அதிபரே சொல்லும் அளவுக்கு நிலைமை இப்போது மோசமாகயிருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பாம்பனில் பாஜக சார்பில் ‘கடல் தாமரை’என்ற போராட்டம் நடத்தப்பட்டது. நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அப்போது, மறைந்த சுஷ்மா சுவராஜ் இங்கே வந்திருந்தார்கள். மத்தியத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும்.
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். இந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா? இதே ராமநாதபுரத்தில்தான் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திரமோடி என்ன பேசினார், “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்”என்று சொன்னார்.
நாங்கள் கேட்கிறோம், பாஜக ஆட்சியில் இருக்கும் இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான அரசு அமையவேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன் என்று குமரிக்கு சென்று, 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பேசினார் மோடி அவர்கள். சபதத்தை போட்டார்.
அந்த சபதத்தை நிறைவேற்றி விட்டாரா? “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்னை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்னை.
இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்துப் பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம்” என்று சொன்னது யாரு? நரேந்திர மோடி. 2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படைதாக்குதல் நடத்தலயா? 2015-ஆம் ஆண்டும் தாக்குதல் நடந்தது.
2016-ஆம் ஆண்டும் தாக்குதல் தொடர்ந்தது. 2017-தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற நிலையிலும் நம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது.
ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பார்க்கிறோம், தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்கள நடத்தியிருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டு மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அதில் 59 பேரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம்தான் இன்னமும் இருக்கிறது.
பிரதமர் மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் என்ன அர்த்தம், மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்? இந்திய – இலங்கை அமைச்சர்கள் மீனவர்கள் பிரச்னை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஸ்மா சுவராஜ். இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் துறை அமைச்சர் மங்கள சமர வீரவும் சந்தித்து பேசினார்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீன்பிடி மீதான கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. எந்த வகையிலும் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டது. மறுநாள் இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்துனார்கள்.
இதை ஏற்று இலங்கை செயல்படவில்லை. “எல்லைக்குள் அத்துமீறக்கூடிய எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கைக் கடற்படையினருக்கு அதிகாரம் உண்டு” என்று இலங்கை அமைச்சர் சொன்னார். தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கைக்கு நாட்டுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. மோடி அரசு வந்ததும் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 122 படகுகளையும் நாட்டுடைமை ஆக்கியது இலங்கை அரசு.
இப்போதும் கைது தொடருகிறது. படகுகளை தர மறுக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? பாஜக அரசுதான்.
ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும்போதும் மத்திய அரசின் கவனத்திற்கு நாம் எடுத்துக்காட்டுகிறோம். அவர்களும் இலங்கை அரசுக்கு சொல்லுகிறார்கள். ஆனால், மறுபடியும் கைதும், தாக்குதலும் நடக்கும். இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், அதற்கு கச்சத்தீவு மீட்கப்படவேண்டும். அதுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Discussion about this post