ADVERTISEMENT
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் இராமேஸ்வரம் மீனவர்களை ஒன்றிய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது என வைகோ கண்டனம்…
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் இராமேஸ்வரம் மீனவர்களை ஒன்றிய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருவதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி-4 ஆம் தேதி இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேர், ஐந்து ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
3 பேரில் இருவருக்கு 6 மாதமும், ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை மற்றும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் பிப்ரவரி-18 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தின் ஒரு பகுதியாக 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்து இருப்பதையும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையும் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3 ஆயிரத்து 76 தமிழக மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளதாகவும் வைகோ சுட்டிகாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சிங்கள அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்ட கருவிகளை மீட்க வேண்டும் என வைகோ தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.