“தேசத்தந்தை மகாத்மா காந்தி..” நாடு முழுவதும் போற்ற காரணம்..?
காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மதிக்கப்படும் ஒரு முக்கிய தேசிய விடுமுறையாகும். அத்தகைய நாளை ஏன் கொண்டாடுகிறோம்..? அதற்கான காரணம் என்ன..? என்பதை பார்க்கலாம். இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைபடுத்தி கொண்டிருந்தபோது எந்த ஒரு சண்டையும் போடாமல் அமைதியின் வழியில் அகிம்சையை கையாண்டு கல்மனது கொண்ட ஆங்கிலேயரையே கரைய வைத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவர்களில் ஒருவர் மாகாத்மா காந்தி.
அத்தகைய மனிதரின் பிறப்பை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2 ஆன இன்று இந்தியா முழுவதும் உள்ள காந்தியின் உருவச்சிலை, நினைவிடம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகாத்மா காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்னாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடிய காந்தி ஜெயந்தி விழாவின் தொகுப்பை பின்வரும் பகுதியில் பார்க்கலாம்.
தர்மபுரி மாவட்டம் :
தர்மபுரியில் காந்தி ஜெயந்தி மற்றும் தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உதயமாகி 60 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் கதர் ஆடையை அணிவித்தும், நெல்லிக்கனி மற்றும் ஸ்வீட்களை வழங்கி கௌரவித்தார்.
இதேபோல் தருமபுரியில் உள்ள காதி பவன் விற்பனை மையத்தில் காந்தியின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு கதர் பட்டை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக அவர் காதி பவனில் உள்ள காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகளின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி நடை பயணம் மேற்கோண்டனர்.
இதேபோல் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் பாண்டியன் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பட்டய தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானமாக வழங்கினர்
மயிலாடுதுறை மாவட்டம் :
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு காந்தியின் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
அரியலூர் மாட்டம் :
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதனையடுத்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி கிராப்ட் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்..
மதுரை மாவட்டம் :
மதுரை காந்தி மியூசியத்தில் மகாத்மா சர்வதே இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர், உத்தங்குடி எம்.பி.ஜெயக்குமார் பங்கேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.அதனைத் தொடர்ந்து காந்தி அஸ்திப் புதைக்கப்பட்ட சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவரும் ஜாதி, மத வேறுபாடுகள் கடந்து, ஒற்றுமையுடன் மனிதநேயத்துடன் வாழ வேண்டுமென்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள காதி கிராப்ட் கதர் பவன் விற்பனை நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி கூடிய விற்பனையை துவக்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டத்தில் உள்ள வட ஆற்காடு சர்வோதயா சங்கத்தின் கிராம கைத்தொழில் பொருட்கள் விற்பனை மையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.மேலும் இந்த நவராத்திரியை முன்னிட்டு கைவினை கலைஞர்கள் உருவாக்கிய பொம்மைகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கதர் விற்பனை மைய செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூரில் மகாத்மா காந்தியின் 156 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட கதர் ஆடைகளின் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
– சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..