திருச்சியில் துரைவைகோ முன்னிலை..! தற்போதைய நிலவரம்..!
திருச்சி பாராளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாஜக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளராக செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் உட்பட 35 பேர் போட்டியிட்டனர்.
திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி :
திருச்சி தொகுதியில் 10 லட்சத்து 49 ஆயிரத்து 210 பேர் வாக்களித்ததன் மூலம் 67.52 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில். தபால் ஓட்டுக்கள் இரண்டு சுற்றுகளாகவும் கந்தர்வகோட்டை சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 18 சுற்றுகளாகவும் புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் 19 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு வருகிறது.
அதேபோல், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 20 சுற்றுகளாகவும், திருவெறும்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 22 சுற்றுகளாகவும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு வருகின்றன.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி காலை முதல் தொடர் கண்காணிப்பில் 3 பேரவைத் தொகுதிகள் என தலா ஒரு பாா்வையாளரை இந்தியத் தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி திருவரங்கம், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பாா்வையாளராக தினேஷ்குமாரும், திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு ராஜீவ் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஓட்டு எண்ணும் பணியில் மொத்தம் 1,627 போ் ஈடுபட்டுள்ளனா். மத்திய, மாநில போலீஸாா், துணை ராணுவப் படையினா் என 1000க்கும் மேற்பட்டோா் 3 அடுக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ முன்னிலையில் உள்ளார். இதையடுத்து மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்கள் எண்ணும் பணி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடங்கியது.
முதலில் இருந்தே மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். திருச்சி மக்களவை தேர்தல் முதல் சுற்று முன்னணி நிலவரம் துரை வைகோ 26186 வாக்குகளும், கருப்பையா 12,981 வாக்குகளும், செந்தில்நாதன் 4047 வாக்குகளும், ராஜேஸ் 5847 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருச்சி தொகுதியில் 13,205 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
– லோகேஸ்வரி.வெ