திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அருகே இன்று(மார்ச்.10) நடைபெற்ற சாலை விபத்தில் திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவன் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மகனை இழந்து வாடும் திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவிற்கு திமுகவினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இரங்கல் அறிக்கையில், “கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும்,உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் திரு.என்.ஆர்.இளங்கோவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.