பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த 45 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் வஞ்சிக்கப்படுவதால் பணி விதிகளில் திருத்தம் செய்து உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஜம்பு தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாணை எண் 148 அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு நல திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் வழங்க வேண்டும். மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணி மேம்பட உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உருவாக்க வேண்டும்.
கடந்த 45 ஆண்டுகளாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் அடுத்த நிலை பதவி உயர்வு என்ன என்று பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தாமல் பதவி உயர்வு வஞ்சிக்கப்பட்டு வருகிறது எனவே பணி விதிகளில் திருத்தம் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முரளிதர் தமிழ்நாடு பி.. ஜி. தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட சட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜான்சன்கென்னடி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.