துரை தயாநிதிக்கு வந்த கொலை மிரட்டல்..!! வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரபரப்பு..!!
திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும்., கலைஞரின் மகனுமான மு.க அழகிரியின் மகன் “துரை தயாநிதி” பிரபல தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். துரை தயாநிதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களுக்கு “ருத்ர தேவ்” மற்றும் “வேதாந்த்” என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வீட்டில் அவர் கால் தவறி விழுந்த போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.. பரிதவித்த உறவினர்கள் அவரை மீட்டு சென்னை அப்பல்லோ அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனால் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அங்கேயே 4 மாதங்கள் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 14ம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 4 மாதங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் துரை தயாநிதிக்கு அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை முதலமைச்சர் ஸ்டாலின்., துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி இருமுறை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று இரவு ஒரு மெயில் வந்துள்ளது.., அதில் “துரை தயாநிதியை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து ஒரு கடிதம் வந்துள்ளது. பின் மருத்துவமனை நிர்வாகம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்ததின் பேரில் இ-மெயில் அனுப்பியது யார் என்பது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி ஏ-பிளாக்கில் கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..