திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த நிலையில் அது தொடர்பாக இன்று அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்ட பலர் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பூர் அவிநாசி சாலை உள்ள விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இந்தக் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு அவர்கள் சாப்பிட உணவு கெட்டுப்போன நிலையில் அதை சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த வார்டன் சிறுவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து உள்ளார்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த சிறுவர்களை மருத்துவர்கள் பரிசோதிக்கும் போது மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.