முடிவுற்ற 10 திட்டப் பணிகள்…!! துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 327 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 2404 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்.
குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசால் பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு பொறுப்பேற்றப் பின்னர், இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 128 திட்டப் பகுதிகளில் 4,752.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 42,313 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 59 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 468 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; பெரியார் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 63 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் – ஆச்சார்யா வினோபா பாவே நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 66 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் 480 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; அண்ணா நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 57 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் 432 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆயக்காட்டூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 81 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் 520 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 327 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள 2404 குடியிருப்புகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இன்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். பிரபாகர், இ.ஆ.ப., இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் க. விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..