77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி சிறப்புயாரைற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் இன்று 77-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டின. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். முன்னதாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கோட்டையில் தேசிய கொடியேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்று “இந்திய ஒன்றிய”த்தின் விடுதலை நாள். “இந்திய ஒன்றி”யத்தின் முக்கிய அங்கம் நம் தமிழ்நாடு. தாய்மொழியாம் தமிழை தாய் மொழியாக கொண்ட நம் தமிழ்நாடு, சென்னை மாகாணம் உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு பேரறிஞர் அண்ணா, “தமிழ் மண்ணின்” முதல்வரான பின்னர்தான் 1967-ல் தமிழ்நாடு என ஜூலை 18-ல் பெயர் சூட்டினார்.
இன்று 3-வது ஆண்டாக “இந்திய நாட்டின் தேசிய கொடி”யை ஏற்றி வைக்கிறேன். 400 ஆண்டுகால பழமையான கொத்தளத்தில் 3-வது முறையாக கொடியேற்றுகிறேன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி நூற்றான்டு விழாவில் கோட்டையில் நின்று கொடியேற்றுவதற்கு பெருமை கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கு விடுதலை நாளன்று கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.
சுதந்திரப் போராட்ட தியாகிகளை நம் திராவிட மாடல் அரசும் போற்றி வருகிறது. 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடினோம். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி கிபி 1600-ல் இந்திய மண்ணில் காலூன்றியது. 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தைதான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்கின்றனர் சில. ஆனால் 1757-ல் தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது. இந்தியா அடிமைப்பட தொடங்கிய அன்றைய தினமே விடுதலை முழக்கம் எழுப்பிய மண் தமிழ் மண். இன்று கோட்டை கொத்தளத்தில் நின்று மூவர்ணக் கொடியேற்றி நான் உணர்ச்சிவசப்படக் காரணம் இது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.