தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது..
“வாழ்வின் ஓரு பொன்னாள் என சொல்லக்கூடிய வகையில் இந்த நாள் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. இந்தியாவின் தலைநகர் வரை அதன் வெளிச்சம் படர்ந்தது. அந்த சூரியனின் பெயர் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் படித்த தொடக்கப் பள்ளியில் இந்த சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். இப்போது அதை அனைத்து பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளோம். சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. உயிர் கொடுக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. எளிய பின்புலத்தை சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது எந்த காரணத்தாலும் தடைபடக் கூடாது என பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். கல்வி பெற வறுமை, சாதிய வேறுபாடு போன்றவை காரணமாக இருக்கக் கூடாது என பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைத்தார்கள்.
அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு உணவு தயார் செய்பவர்களுக்கும் உங்கள் முதல்வர் அன்பாக ஒரு கோரிக்கை வைக்கிறேன். தாய் உள்ளத்துடன் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள் எது குறித்தும் கவலை கொள்ளாமல் கல்வி பயில வேண்டும். படிப்பு மட்டும் தான் உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாத சொத்து. அந்த சொத்தை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகளை நிறைவு செய்ய நமது அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அது உங்களை உயர்த்தும்.
நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிற விண்கலனை அனுப்பி சாதனை படைத்துள்ள தமிழக அறிவியலாளர்கள் போல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிற வகையில் உலகமே கவனிக்கும் சாதனையாளராக நீங்கள் உருவாக வேண்டும். அதனை உங்கள் பெற்றோருடன் சேர்ந்து நானும் பார்க்க வேண்டும். அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.