CISF காவலருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலை கடற்கரையில் நேற்று இரவு 11 மணி அளவில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடற்கரையில் அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கு நடை பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் கூச்சலிடவே உடனே அங்கிருந்து நகர்ந்த அந்த நபர் சற்று தொலைவில் மற்றொரு பெண்ணிடமும் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அங்கிருந்த நொச்சி குப்பம் மீனவ பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில் பொதுமக்கள் அவரை தரும அடி கொடுத்து காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த நபரை கைது செய்த மயிலாப்பூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் சரவணன் என்பதும் அவர் சி.எஸ்.ஐ.எஃப் காவல் ஆய்வாளராக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் அந்த நபர் உண்மையில் சிஎஸ்ஐ காவலரா அல்லது போலி அடையாள அட்டையுடன் சுற்றி திரிகிறாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மயிலாப்பூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பட்டினம்பாக்கம் முதல் நொச்சி குப்பம் லூப் சாலை வரை கடற்கரைப் பகுதியில் இரவு நேரங்களில் சிலர் மது மற்றும் கஞ்சா போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல முடியாத நிலையில் ஏற்படுவதாகவும் அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இப்பகுதிகளில் கூடுதல் காவல் ரோந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்