சினிமா டூ அரசியல்..!! தனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம்..!! கலைஞர் எனும் சகாப்தம் – 2
படித்ததில் பிடித்தது ஆரம்ப காலத்தில் ஒரு மனிதன் தன்னுடைய சிறு வயதில் ஏதாவது சாதித்து தனகென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னைக்கு வந்தார்…
ஆரம்ப காலத்தில் கதைகள் மற்றும் நாடகம் என எழுத ஆரம்பித்தார். அதன் பின் அழகிரி சாமியின் சமூக நலன்கள் குறித்த பேச்சுகளை கேட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையோடு அரசியலால் கால் பதித்தார்.
இதுவரை 5 முறை முதல்வராக இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். 1967ம் ஆண்டு எம்.ஜி.ஆர் எதிர்த்து போட்டியிட்டார்., அந்த ஆண்டு ஆட்சியை தொடர்ந்து 1971ம் ஆண்டும் முதல்வராக பதவி வகித்தார். அதன் பின் 1989ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996ம் ஆண்டும் ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு பல லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் சமயங்களில் தன்னுடைய சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தார்…
முரசொலி தொடங்கி முதல் கார் வரை :
எனக்கு 18 வயதாகும் போது “முரசொலி” வாரப் பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டரில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன்.
அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய “மந்திரி குமாரி” நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது.
அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய “மணமகள்” திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டுமென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.
அதுபோலவே “இருவர் உள்ளம்” திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.
நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்வர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார். அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்வரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.
அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார்.
அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது – “வாக்சால்” -4983. இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன்.
1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன்.
முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், “ரைசிங் சன்” ஆங்கில இதழும் நான் தொடங்கியவை தான். இவைகள் அனைத்தும் முரசொலி மாறன் சம்பாதித்தவை..
இதுவரை நாம் பார்த்தது அவர் அரசியலில் சந்தித்த முதல் ஒரு பகுதி மட்டும் தான்.., அவரின் அரசியல் வரலாறு பற்றி சொல்ல இந்த ஒரு தொகுப்பு மட்டும் போதாது., எனவே அடுத்த தொகுப்பிலும் இதன் தொடக்கத்தை பார்க்கலாம்..