கோவையில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் அடைந்தனர்.
வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அவிநாசி சாலை,ரயில் நிலையம், பூ மார்க்கெட், உக்கடம், இடையர் பாளையம் ஆகிய மாநகர பகுதிகளிலும் கணுவாய், தடாகம் சோமையம்பாளையம், ஆகிய புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் இடையர்பாளையம், கோவில்மேடு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.