அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்..! தொடங்கப்பட்டதன் நோக்கம்..!
தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என தமிழ்நாட்டில் உள்ள, பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என உங்களுடைய முன்னேற்றத்திற்கும், எதிர்காலத்திற்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு, பாடு படக்கூடிய எண்ணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.
ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வோட நான் உருவாக்குன திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம்! – மாண்புமிகு முதலமைச்சர்#CMMKSTALIN | #TNDIPR | #TNBreakfast |@CMOTamilnadu @mkstalin@Udhaystalin @Anbil_Mahesh @geethajeevandmk @mp_saminathan @tnschoolsedu pic.twitter.com/CyZps09fFO
— TN DIPR (@TNDIPRNEWS) July 15, 2024
பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுடைய பசியைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம் தான், இந்த காலை உணவுத்திட்டம். சென்னையில், ஒரு பள்ளி விழாவிற்கு சென்றபோது, ஒரு குழந்தை, “இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என்று சொன்னதை கேட்டவுடனே, ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வுடன் நான் உருவாக்கிய திட்டம் தான், இந்த காலை உணவுத் திட்டம்.
அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோட பள்ளிக்கு வரக் கூடாது என்று இந்தத் திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன்.
இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தானா..? எங்களுக்கு இல்லையா..? என்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் கேட்டார்கள். அதனால் தான், 18 லட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் வயிறார சாப்பிட இந்த திட்டத்தை இன்றைக்கு விரிவுபடுத்தியுள்ளோம்.
இனிமேல், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் காலை உணவு சாப்பிட இருக்கிறார்கள். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்.
குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் எதிர்கால சொத்து..! அதனால்தான், காலை உணவுத் திட்ட ஒதுக்கீடு பற்றி, அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோது, அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள், வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என்று சொல்லுங்கள் என்று ஆணித்தரமாக சொன்னேன். ஆனால், இந்தத் திட்டம் மாணவ மாணவியருக்கு தன்னம்பிக்கையை அளிக்கின்றது. பெற்றோர்களுக்கு பொருளாதாரச் சுமையை குறைக்கின்றது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. இடைநிற்றலை குறைக்கின்றது.
இந்த காலை உணவுத் திட்டம் நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு நீடித்த புகழைத் தேடித் தந்திருக்கிறது. நாம் தொடங்கிய பின்பு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஏன் கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. உங்கள் குழந்தைகள் சாப்பிடுகிற சாப்பாட்டை எப்படி கவனமாக பார்த்துக் கொள்வீர்களோ அதுபோல, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடைய சாப்பாட்டையும் கவனமாக ‘ஸ்பெஷல் கேர்’ எடுத்து பாருங்கள்” என்றார்.
மேலும், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை CM Dashboard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்” என ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..