முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.
வருகிற சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15-ந்தேதி கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்ற உள்ளார். அதன்பின்னர், ஆகஸ்ட் 22-ந்தேதி அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் அவர் 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதலமைச்சர் ஆகி விடுவார் என்று மீண்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுதந்திர தினத்துக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.