நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி பணத்தை மோசடி செய்த வழக்கில் முன்னாள் பெண் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் கணக்காளர் ரம்யா பணியில் இருந்தபோது ரூ 45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் ரம்யா தான் கைது செய்யப்படக்கூடும் என்று முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு நேற்று (9.3.2022) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரம்யா தரப்பில் 45 லட்சம் ரூபாயில் 21 லட்சம் செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. நடிகர் விஷால் தரப்பில் ரம்யாவிற்கு முன் ஜாமீன் வழங்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரம்யா 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் பிணைத் தொகையை ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post