திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் பட்டப் பகலில் பழையகாயல் அருகே சென்ற அரசுப் பேருந்தை பைக்கில் வந்த மூன்று பேர் வழிமறித்து பயணிகள் முன்னிலையில் நடத்துனரை தாக்கி ரூ.15ஆயிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூரிலிருந்து மதுரைக்கு தூத்துக்குடி வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை பட்டு ராஜா இயக்கியுள்ளார். இதில் நடத்துனராக ராமசாமி என்பவர் இருந்து வந்துள்ளார். இந்த பேருந்தானது முக்காணி அருகே சென்ற போது பேருந்தை பைக்கில் வந்த மூன்று பேர் பின் தொடர்ந்து சென்றனர். பின் தொடர்ந்து சென்ற அந்த மூன்று பேர் பேருந்தை நிறுத்துமாறு சத்தம் போட்டுக் கொண்டே பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
பேருந்தானது பழைய காயல் புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் மெதுவாக சென்றபோது பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் புது பைக்கை நிறுத்தியுள்ளனர். அந்த மூன்று மர்ம நபர்களில் இரண்டு பேர் பேருந்தில் பின்பக்கம் நடத்துனர்.இருக்கையில் இருந்த நடத்துனரை செருப்பால் சர மாறியாக தாக்கி உள்ளனர்.
இதனையடுத்து நடத்துனரிடம் இருந்த பணப்பையில் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். பட்டப் பகலில் ஓடும் பேருந்து வழிமறித்து பயணிகள் முன்னிலையில் நடத்துனரை தாக்கி பணத்தை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.
Discussion about this post