விஷவாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு..!
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்த விஷவாயு அப்பகுதியில் இருந்த வீடுகளில் உள்ள கழிவறை வாயிலாக வெளியேறிய நிலையில் கழிவறைகளை பயன்படுத்திய ஐந்து பேர் விஷவாயு தாக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 15 வயது சிறுமி செல்வராணி, 75 வயது மூதாட்டி செந்தாமரை, செந்தாமரையின் மகள் காமாட்சி 50 ஆகிய மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பாலகிருஷ்ணன் (70) மற்றும் பாக்கியலட்சுமி (30) ஆகிய இருவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி விஷவாயு தாக்கி பலியன சம்பவதில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அலட்சியமாக இருந்த அதிகாரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆளும் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் ஆளும் அரசு மெத்தன போக்கும் கவனக்குறைவு மட்டுமே மூன்று பேர் பலியானதற்கு காரணம் அதுமட்டுமின்றி மக்கள் அடிப்படை தேவைகளான பாதாள சாக்கடை சரி செய்யக்கூட ஆளும் அரசுக்கு தகுதி இல்லையா என்றும் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை ஆளும் அரசு மூடி மறைக்கிறது.
எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் மேலும் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதி விசாரணை வேண்டும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குவதோடு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் அந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ரெட்டியார் பாளையம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை மறியலை கைவிட வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனாலும் தொடர்ந்து மறியலை கைவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.
இதனால் போலீசார் சாலையில் மறியலில் ஈடுபட்ட கட்சியினரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
இதனால் போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் பெண்கள் தொடர்ந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். இது தற்போது புதுச்சேரியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்