ராசிபுரம் அருகே 13 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட அங்காளம்மன் கோவில். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டி அங்காளம்மன் திருக்கோவிலானது அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு கோவில் பூசாரிகளுக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதன் காரணமாக பூசாரிகள் நீதிமன்றத்தில் 4 வழக்கு தொடர்ந்து நிலையில் வழக்கானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நாமக்கல் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 4 வழக்குகளின் தீர்ப்பானது கடந்த 9ம் தேதி வெளியானது.
அதனைத் தொடர்ந்து அங்காளம்மன் கோவிலை திறப்பது தொடர்பாக நாமக்கல் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் கடந்த 18ஆம் தேதி அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றதில் ஒரு தரப்பினர் மட்டுமே கலந்து கொண்டனர். இறுதியாக பேச்சுவார்த்தையின் முடிவில் 25ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திறக்கப்படும் என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டார். உத்தரவை அடுத்து இன்று கடந்தப்பட்டி அங்காளம்மன் கோவில் திறப்பதற்கான பணிகளை கோவில் நிர்வாகத்தின் செய்து வந்த நிலையில் கோவிலில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் காலை 10 மணி அளவில் கோவிலானது திறக்கப்பட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை அலங்கரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்காளம்மன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தப்பட்டி அங்காளம்மன் கோவில் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்…