தல தோனிக்கு மட்டும் தான் இது எல்லாம் நடக்கும்..!! தோனியின் மந்திரம்..?
மகேந்திர சிங் தோனியை ஏன் இப்படி விழுந்து விழுந்து கொண்டாடுகிறார்கள்… இன்றைய சூழலில் ஒரு பெரிய திரை நட்சத்திரத்துக்குக் கூட இத்தனை வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
தோனி நின்றால், நடந்தால், திரும்பினால் என்று அத்தனையும் செய்தியாகிறது. சமூக வலைதளம் அலறுகிறது. அவர் ஐந்து பந்துகள் ஆடினாலும் அது தேசிய அளவில் டிரெண்ட் ஆகிறது. சச்சின் புகழ் உச்சத்தில் இருந்தபோது இது போல இன்னொரு வீரருக்கு புகழ் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்ததுண்டு. அதையெல்லாம் தோனி எப்போதோ கடந்து விட்டார்.
புகழின் புதிய உச்சத்தில் இனி தோனி என்ற பெயர்தான் எழுத வேண்டியிருக்கும். அதிலும் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்ட பிறகு அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் மிஸ் செய்கிறார்கள் போல. ஐபிஎல் போட்டிகளில் வெறி பிடித்து விடுகிறது.
மக்களின் தோனியின் மீதான அன்புக்கு முதல் காரணம் அவருடைய தலைமைப் பண்புதான். தோனி விளையாடிய காலத்திலும் அதற்கு முன்பும் அவரை விடத் திறமையான எத்தனையோ வீரர்கள் வந்து போயிருக்கிறார்கள்.
ஆனால் அவரைப் போல ஒரு அணியை ஒருங்கிணைத்து வழிநடத்தி வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும் ஒரு லீடராக அவர்கள் இருந்ததில்லை.
கபில் தேவை வேண்டுமானால் ஓரளவு ஈடாகச் சொல்ல முடியும். ஆனால் அவர் இயங்கிய காலமும் அப்போது இருந்த அழுத்தங்களும் வேறு. போகும் இடத்திலெல்லாம் கேமரா இல்லை. இந்தியா வெல்லாவிட்டால் வீடுகளில் கல்லெறிந்தவர்கள் இல்லை. தோனி தலைமை வகித்த காலம் மிகவும் சவாலான காலம்.
அத்தனை சவால்களையும் தாண்டி தோனி பெற்றுத் தந்த வெற்றிகள் மறக்கவோ மறுக்கவோ முடியாதவை. மாபெரும் வீரர்கள் பலர் வந்தாலும் சாதனைகள் செய்தாலும் இந்தியாவின் கையில் கோப்பையை வாங்கித் தர அவர்களால் முடியவில்லை. ஏனென்றால் அதற்கு அவர்கள் திறமை மட்டுமே போதாது.
ஆனால் தோனி எங்கு சென்றாலும் அங்கே வெற்றிகளை உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறார். களத்தில் மட்டுமல்ல களத்துக்கு வெளியிலும் சிறந்த தலைவர்களாக இருப்பவர்களால் மட்டுமே இப்படி ஒவ்வொரு முறையும் வென்று கொண்டிருக்க முடியும்.
தோனியின் இன்னொரு சிறப்பு, அவர் தன்னோடு இணைபவர்களின் முழுத் திறமையையும் வெளிப்பட களம் அமைத்துத் தருகிறார். இது வரை சர்வதேச கிரிக்கெட்டே விளையாடாத சிறுவனாக இருந்தாலும் சரி, அல்லது அவரவர் தேசத்தில் இனி இவர் இவ்வளவு தான் என்று கைவிட்ட முப்பதுகளின் இறுதியில் இருக்கும் ஆட்டக்காரர்களாக ஆனாலும் சரி, தோனியின் கை பட்டதும் சாமியாட ஆரம்பித்து விடுவார்கள்.
ரஹானே, பதிரனா ஆகியோர் இதற்கு சமீப எடுத்துக்காட்டு. சித்தப்பாக்களின் அணி என்று கிண்டல் செய்யப்பட்ட ஒரு அணியை வைத்துக் கொண்டு கோப்பையை வென்று காட்டினார். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கொடுங்கள், ஜெயிப்பதுதான் என்னுடைய வேலை என்பது தோனி மந்திரம்.
இது தவிர தோனியின் சாதாரணமான பின்னணி அவர் மீதான மக்கள் அபிமானத்துக்கு இன்னொரு காரணமாக இருந்திருக்கிறது. பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் பெருநகர உயர் நடுத்தரக் குடிகளாகத்தான் இருப்பார்கள்.
அவர்களுக்கு மத்தியில் சிறிய நகரத்தில் ஒரு சாதாரண பின்னணியிலிருந்து எழுந்து வந்து உச்சத்தில் ஏறிய தோனி ஒரு தனித்த நட்சத்திரமாகத் தெரிவதில் ஆச்சரியம் இல்லை.
அதேபோல தன் விளையாட்டு வாழ்க்கையில் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. எப்போது விளையாட வேண்டும், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் இதுவரை ஓரளவு சரியாக முடிவு செய்து அதை செயல்படுத்தியும் வந்திருக்கிறார்.
வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை அவர் பொருட்படுத்துவதில்லை. தன் முடிவுகளைத் தானே எடுத்து அதில் உறுதியாக நிற்கும் அவரது குணமும் அனைவரும் கவனித்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. இப்போது கூட அவர் ஓய்வு பெற வேண்டும் என்று வழக்கம் போல கிரிக்கெட் பண்டிதர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு கல்லாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் கட்டி எழுப்பிய அவருக்கு எந்த நிலையில் எப்போது அதை விட்டுச் செல்ல வேண்டும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
நிச்சயமாக தோனியை விட அதிரடியான ஆட்டத்தோடு பலர் வரலாம். அவர் செய்த சாதனைகளை முறியடிக்கலாம். இப்போது உச்சத்தில் இருக்கும் தோனிக் காய்ச்சல் சில நேரம் ஒவ்வாமையைக் கிளப்புகிறது.. என்றாலும் தோனி போல ஒரு நிதானமும் புத்திசாலித்தனமும் கொண்ட ஆட்டக்காரன், நம் பிள்ளைகளிடம் அதோ அவரைப் போல இரு என்று சுட்டிக்காட்டப் பொருத்தமான தலைவன் மறுபடி தோன்றப் பல வருடங்கள் ஆகலாம்.
தோனி வரும் வரை தனி மனித சாதனைகள் பல நடக்கும் ஆனால் ஒரு அணியாக இந்தியா தோற்கும் என்ற நிலைதான் இருந்தது. அதை மாற்றிய தோனியை மக்கள் எல்லையில்லாமல் நேசித்துக் கொண்டே போவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
அப்படியான ஒரு வீரனின் எஞ்சியிருக்கும் சொற்ப மைதான நாட்களைத்தான் வெறிபிடித்துக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
அது சிஎஸ்கே மட்டுமல்ல, தோனியால் மகிழ்ந்த ஒட்டு மொத்த நாடும்தான். அந்தக் கொண்டாட்டம். அந்த நாளில் அவன் ஆடிய ஐந்து பந்துகளுக்காக அல்ல. வெறும் மூன்று சிக்சர்களுக்காக அல்ல. கடந்த இருபது ஆண்டுகளாக அவன் இடைவிடாது நிகழ்த்தியிருக்கும் சாதனைகளுக்காக. கொஞ்சம் கொண்டாடட்டுமே…
– வீர பெருமாள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..