தனது தந்தையின் மரணத்தை அடுத்து நிகழ உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சி குடும்ப நிகழ்வாக இருக்க விரும்புவதாக நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவரது தந்தை இன்று அதிகாலை மரணமடைந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் ஆகியோர் சோசியல் மீடியாவில் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் ரசிகர்கள் குவியக்கூடும் என்பதால் நடிகர் அஜித்குமார் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலயின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின்
அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும். எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
Discussion about this post