நடிகை கெளதமி நிலமோசடி புகார்..! மதுரை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!
ராமநாதபுரம் காவல்நிலையத்தில் நடிகை கெளதமி புகார் ஒன்றை அளித்துள்ளார்.. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது அழகப்பன் என்ற நபர் ராமநாதபுரத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வாங்கி இருந்தார்.. பின் ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சுவாத்தான் கிராமத்தில் 64 ஏக்கர் நிலத்தை 57 லட்சத்திற்கு வாங்கி கொடுத்தார்..
ஆனால், பிளசிங் பார்ம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை என்னிடம் காலி மனை என கூறி விற்பனை செய்துள்ளார். அந்த நிலம் செபி அமைப்பு தடை செய்யப்பட்ட நிலம், அதையும் என்னிடம் மறைத்து நில மோசடி செய்துள்ளார். எனவே என்னை எமாற்றிய 3 கோடி ரூபாய் பணத்தை என்னிடம் இருந்து மீட்டு தரக்கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரை ஏற்ற ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் அழகப்பன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அழகப்பனுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என கெளதமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்கள் நேற்று நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. நடிகை கௌமதி தரப்பு வழக்கறிஞர், அழகப்பனுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் போலீசார் தரப்பில், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் விடப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நக்கீரன், ராமநாதபுரம் போலீசார் கால அவகாசம் கோரியதை ஏற்று, வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், ஜூலை 4ம் தேதி வரை ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
– லோகேஸ்வரி.வெ
















