சமூகவலைதளங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிடக்கூடாது என விஜய் அறிவுரை செய்துள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவுவை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் நேற்று நடைப்பெற்றது.
இதில் மாநிலம் முழுக்க இருந்து வந்திருந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். விஜய் ஊரில் இல்லாததால் இந்த கூட்டத்திற்கு மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை ஏற்றார்.
கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த்,
”ரசிகர் மன்றமாக துவங்கி, மக்கள் இயக்கமாக பயணித்து வருகிறோம். வரும் காலங்களில் வேறு ஒரு பரிணாமத்தில் செயல்பட முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அதற்காக பல கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறோம்.
மக்கள் இயக்கம் தமிழகத்தில் பலமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
சமூகவலைதளங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிடக்கூடாது. கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். எந்த வகையிலும் தனி நபர் தாக்குதல் இருக்க கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்திற்குள் சிக்காமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என தளபதி விஜய் அறிவுறுத்தியதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.