தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக கலைஞராக வலம் வந்தவர் மனோபாலா. தமிழில் 700 படங்களில் நடித்துள்ள மனோபாலா, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 3 படங்களை தயாரித்துள்ளார். சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வந்த மனோபாலா, கடைசியாக தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மனோபாலா சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோபாலா நேற்று திடீரென மரணம் அடைந்தார்.
இதனையடுத்து மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சித்தார்த், ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று நடிகர் மனோபாலாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. மனோபாலாவின் அவரது உடல் வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதற்காக முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனம், மலர் அலங்காரத்துடன் தயார் செய்யப்பட்டது. வாகனத்திற்குள் மனோபாலாவின் உடலுடன் அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். ஆர்.கே.செல்வமணி, கருணாஸ், பேரரசு, கோவை சரளா, பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் மின் மயானம் வரை கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ராஜமன்னார் சாலை வழியாக வளசரவாக்கம் மயானத்திற்கு மனோபாலாவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் கூடி நின்ற ஏராளமான மக்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மயானத்தில் மனோபாலாவின் உடலுக்கு அவரது மகன் ஹரிஷ் இறுதி சடங்குகளை செய்தார். அப்பாவின் உயிரற்ற உடலை பார்த்து கண்ணீர் வடித்த படியே ஹரிஷ் அவரது சடலத்தை சுற்றி வந்த காட்சிகள் அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கின. அதன் பின்னர் மின் மயானத்தில் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Discussion about this post