நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தல என கொண்டாடப்பட்டு வரும் அஜித்குமார், ‘துணிவு’ பட வெற்றிக்குப் பிறகு பைக் ரைடு செல்வது, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது என நேரத்தை செலவிட்டு வருகிறார். இடையில் அவரது அடுத்த படத்திற்கான இயக்குநர் மற்றும் கதையை முடிவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து அஜித்தின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சுப்பிரமணியத்திற்கு மோகினி என்ற மனைவியும், அஜித்குமாருடன் அனில் குமார், அனூப் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.
இன்று அதிகாலை மறைந்த அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

















