திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை..!! அமைச்சர் ஏ.வ.வேலு உரை..!!
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர்.
இதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சட்டப்பேரவை கூடவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளதாக விளக்கம் அளித்தார். தேனி, மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் நடப்பாண்டிலேயே அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.