மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் அதிரடி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த அறிக்கைகள்..!
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கைகளை தமிழக அரசு கடந்த 2022 ம் ஆண்டு ஏற்க மறுத்தது.. ஆனால் மாநிலத்திற்கு என கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி அதே ஆண்டு ஜூன் 1ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுக்களை அமைத்தது.
அந்த குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான கருத்துகளை கேட்பதோடு, பரிந்துரைகளை வழங்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அந்த குழுவின் உறுப்பினர்களாக கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம.சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்டளையை சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த குழுவினர் முதலமைச்சரிடம் சில அறிக்கைகளை தற்போது சமர்ப்பித்துள்ளனர். அதாவது பொதுமக்கள், மாணவர்கள், கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரிடம் இருந்து கேட்கப்பட்ட கருத்துகளை மாநிலக் கொள்கையாக உருவாக்கப்பட்டு தமிழில் 600 பக்கங்களும் ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்துள்ளனர்..
1) நீட் ஒழிப்பு
2) இரு மொழி கொள்கை,
3) கல்லூரிகளில் சேர 12 ஆம் வகுப்பு மட்டுமின்றி 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்
4) 3, 5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது
உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ