போலீஸ் என கூறி பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பல்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!
குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (33). இவர், குரோம்பேட்டையில் மருந்தகம் நடத்தி வருகிறார்.
இவரது மருந்தகத்தில் வியாபாரம் களைக்கட்டியதை பார்த்த மர்ம கும்பல் 10 நாட்களாக இவரை கடத்த பின்தொடர்ந்துள்ளனர். ஆனால் முடியாமல் போன விரக்தியில் இருந்தனர்.
இந்தனிலையில் கடந்த 22-ம் தேதி அசாருதீன் வழக்கம் போல் மருந்தகத்தில் வேலை நேரம் முடிதனதும் தனது மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். இதனை கண்ட மர்ம கும்பல் காரில் வந்து திருநீர்மலை பிரதான சாலையில் அவரை மடக்கி பிடித்தது.
மேலும், தங்களை போலீஸ் என்று கூறியதோடு அசாருதீனிடம் சட்டவிரோதமாக மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.7.5 லட்சம் தர வேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் அதே இடத்தில் என்கவுன்ட்டர் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன அசாருதீன் செய்வதறியாமல், அவர்கள் கேட்டதொகையை 3 தவணைகளாக கொடுத்துள்ளார். மேலும் அவரிடம் பணம் பறிப்பதற்காக, அந்த கும்பல் கடந்த 29-ம் தேதி மீண்டும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு ரூ.30லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் அசாருதீன், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் இம்ரான்(27), அஸ்வின்(எ)சதாம்(28), சதீஷ் (29), யஷ்வந்த் பாபு(33), கார்மேகம் (38), வேணுகோபால் ராவ்(27), அந்தோணி ராஜ்( 36), முகமது ரபீக் (40), அருண் குமார்(40) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, அவர்களிடமிருந்து கை விலங்கு, வாக்கி டாக்கி மற்றும் பொம்மை துப்பாக்கி, செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து 9 பேர்மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தின் ஒப்படைத்து புழல் சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்