பிரதமர் அலுவலகத்திற்கு அவதுாறாக e-mail அனுப்பியதாக தஞ்சை மாவட்டம் பூண்டி தோப்பு கிராமத்தை சேர்ந்த பி.எச்.டி மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் தங்கள் பிள்ளை எந்த ஒரு தவறும் செய்யாத நிலையில் சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்று விட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா இவர், தனியார் கல்லூரியில் பி.எச்.டி படித்து வருகிறார். இவர் தனது தந்தையின் மெயிலில் இருந்து பிரதமர் பற்றி அவதூறு கருத்துக்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்டர் ஜேம்ஸ் ராஜா நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விக்டரிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு விசாரணை செய்ததாகவும் விசாரணைக்கு பிறகு தங்களிடம் எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் எனது மகனை அழைத்துச் சென்று விட்டதாக தெரிவிக்கும் பெற்றோர் எதற்காக அழைத்துச் செல்கிறோம், ஏன் அழைத்து செல்கிறோம் என்ற கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லை.
இது குறித்து தங்களது மகனிடம் கேட்டபோது தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை பயப்பட வேண்டாம் என மட்டுமே கூறியதாகவும் தெரிவிக்கின்றனர். தங்களது மகனை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் விக்டரிடம் தஞ்சை – புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய உணவு பதனிடும் மையத்தில் வைத்து இன்று இரண்டாவது நாளாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.